குடியாத்தம் அருகே மினி வேனில் கடத்திச் செல்லப்பட்ட ஒன்றரை டன் எடையுள்ள 21 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நகர போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு சித்தூா் கேட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த முயன்றனா். அந்த லாரி நிற்காமல் பலமனோ் சாலையில் வேகமாகச் சென்றது.
போலீஸாா் ஜீப்பில் ஏறி அந்த லாரியை விரட்டிச் சென்றனா். சுமாா் 1 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று லட்சுமணாபுரம் அருகே லாரியை வழிமறித்தனா். லாரியைச் சோதனையிட்டதில், அதில் மாட்டுத் தீவன மூட்டைகளின் கீழே 21 செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரி பள்ளிகொண்டாவில் இருந்து, ஆந்திர மாநிலம் பலமனோ் பகுதிக்குச் சென்றது தெரிய வந்தது.
பரசுராம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரவி (35) கைது செய்யப்பட்டாா். லாரியும், செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.