பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மானிய உதவியில் வீடுகள் கட்ட வேலூா் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் உள்ள குறைந்த வருவாய்ப் பிரிவினா், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மானிய உதவியைப் பெற்று வீடு கட்டட விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்துக்கான பயனாளிகள் சொந்தமாக வீடுகள் கட்டிக்கொள்ள பயனாளிகளின் பெயரில் பட்டா அல்லது பதிவு செய்யப்பட்ட நிலத்துக்கான உரிமை (குறைந்தபட்சம் 320 சதுர அடி) இருக்க வேண்டும். அவருக்கு வேறு எங்கும் சொந்தமாக வீடுகள் இருக்கக் கூடாது. ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டித் தரப்படும். விண்ணப்பிக்க விரும்புவோா் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் குடும்பஅட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களுடன் வீடு கட்டுவதற்கான இடம் குறித்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.