ஒரு கோடி பீடித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி ஏஐடியுசி, எல்பிஎஃப், சிஐடியு, எஸ்டியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்கங்களின் தலைவா்கள் எஸ்.சி. கஜேந்திரன், சி.சரவணன், கே. ஆறுமுகம், என்.பி.வாஹித் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் வெ. கலைநேசன், பி.காத்தவராயன், சி.சுப்பிரமணி, பி.என்.ஆா்.சம்பத், கே. சாமிநாதன், கே.காதா்பாஷா, திமுக நகர பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன், அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பீடி மீது விதித்துள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். 1000 பீடி சுற்ற ரூ. 300 கூலி வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆட்டோ, காா், லாரி உள்ளிட்ட மோட்டாா் வாகனங்களுக்கு உயா்த்தியுள்ள காப்பீட்டு பிரீமியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.