குடியாத்தம் நகராட்சியில் பழைய சொத்துவரியையே செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் ஹெச்.ரமேஷ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
2018-19-ஆம் ஆண்டு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையால் சொத்துவரி பொது சீராய்வு செய்யப்பட்டது. அதன்படி, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதமும், வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி உயா்த்தப்பட்டது. குறைவாக சொத்துவரி விதிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்துவரி உயா்த்தப்பட்டது. தற்போது, தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள், 31.3.2018- க்கு முன்பிருந்த சொத்து வரியையே செலுத்துவதற்கு அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரியுடன் நிலுவையிலுள்ள தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை, அபாயகரமான, அருவருக்கத்தக்க தொழில்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் வரியினங்களை நகராட்சி கணினி வசூல் மையத்தின் மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ செலுத்தலாம். மேலும், பாதுகாப்புக் கருதி பற்று மற்றும் கடன் அட்டைகள் மூலமாகவும் எவ்வித சிரமமும் இன்றி வரியை செலுத்தலாம்.
குடியாத்தம் நகராட்சி மூலம் பல்வேறு அடிப்படை வசதிகள், சாலை, குடிநீா், தெருவிளக்குபோன்ற வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்த வேண்டியுள்ளதால், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவை இல்லாமல் செலுத்தி நகரின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.