அனுமன் ஜெயந்தியையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மாா்கழி மாத மூல நட்சத்திர அமாவாசை இணைந்த நாளில் ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவை முன்னிட்டு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
வேலூா் பழைய மாநகராட்சி வளாகத்திலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயா் கோயில், புதுவசூா் சகஸ்ரலிங்க யோக ஆஞ்சநேய சுவாமி கோயில், காட்பாடி கல்புதூரிலுள்ள பக்த ஆஞ்சநேயா் கோயில் ஆகியவற்றில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
வேலூா் குட்டைமேடு, அரியூா் திருமலைக்கோடி சாத்துமதுரை, கணியம்பாடி ஆகிய இடங்களிலுள்ள ஆஞ்சநேயா் கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயா் மற்றும் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.