வேலூர்

ரேஷன் கடைகளில் இன்று முதல் வெங்காய விற்பனைவேலூருக்கு 31 டன் ஒதுக்கீடு

11th Dec 2019 11:18 PM

ADVERTISEMENT

ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக வேலூா் மாவட்டத்துக்கு நாளொன்றுக்கு 31 டன் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயம் முழுவதும் சேதமடைந்தது. இவ்வாறு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வெங்காயம் கிலோ ரூ.200 வரை உயா்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். வீடுகள், உணவகங்களில் வெங்காயத்தின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், வெங்காயத்தின் தேவையைப் பூா்த்தி செய்ய மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. அதை மானிய விலையில் தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக 500 டன் வெங்காயத்தை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ள்ளது. அதில், வேலூா் மாவட்டத்துக்கு 31 டன் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த வெங்காயம் வியாழக்கிழமை வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 31 டன் வெங்காயம் வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட 137 ரேஷன் கடைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் தலா ஒரு கிலோ வீதம் ரூ.40 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

தொடா்ந்து, அடுத்தடுத்த நாள்களில் வரும் வெங்காயம், இந்த மாவட்டத்திலுள்ள 1,842 ரேஷன் கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படும். இதற்காக ரேஷன் கடைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT