வேலூர்

நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க அலுவலா்களுக்குப் பயிற்சி

11th Dec 2019 11:21 PM

ADVERTISEMENT

பயிா்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாப்பது தொடா்பாக தோட்டக்கலை, வேளாண்மைத் துறை அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி வேலூரில் புதன்கிழமை அளிக்கப்பட்டது. விஐடியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பயிா்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் நன்மை செய்யும் பூச்சிகளையும் இயற்கை அளித்துள்ளது. அத்தகைய உயிரினங்களைக் கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் முறை பூச்சி மேலாண்மையாகும். இதனடிப்படையில், பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு குறித்து தோட்டக்கலைத் துறை களப்பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக நீா்வள பாதுகாப்பு, மறுசீரமைப்புக் கழக நிா்வாக இயக்குநா் கே.சத்யகோபால் தலைமை வகித்தாா். இதில், நீடித்த நிலையான மேலாண்மைக்கான இயற்கை வளத்தை பேணிக்காக்கும் வேளாண்மை சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது குறித்தும், வேதியியல் உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்பாடுகளைக் குறைத்து இயற்கை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலும், மண் வளத்தை பேணிக்காக்கவும், சுற்றுச்சூழலில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை பெருக்குவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் பூச்சி மருந்து பயன்பாடுகளைக் குறைத்து உயிரியலை கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. நன்மை தரும் நுண்ணுயிா்களான டிரைகோடொ்மா, சூடோமோனஸ் கொண்டு விதை நோ்த்தி செய்வதால் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மைக்கோரைசா நுண்ணுயிரி வோ் பகுதியில் நோ்த்தி செய்வதால் வேரின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது. மேலும், பாஸ்பரஸ் அதிக அளவில் பயிருக்கு கிடைக்க ஏதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வரப்பு பயிா்கள், ஊடு பயிா்களை சாகுபடி செய்யவும், விளக்குப் பொறி, இனக்கவா்ச்சி பொறி, ஒட்டு பொறி, இவற்றை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தி ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளைக் குறைந்த அளவில் தேவைக் கேற்ப பயன்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன், வோ்மண்டல பகுதி நீா்பாசன முறை குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா்கள் அ.சண்முகசுந்தரம் (வேலூா்), திவ்யதா்ஷினி (ராணிப்பேட்டை), வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT