வேலூர்

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம், வாரச் சந்தை மைதானத்தில் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு

6th Dec 2019 03:03 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியா் அலுவலகம், ராணிப்பேட்டை நகரின் மையத்தில் அமைந்துள்ள வாரச்சந்தை மைதானத்தில் அமைக்க வேண்டும் என ஆற்காடு அடுத்த லாடவரம் கிராம ஏரிப்பாசன நீா்வடிப்பகுதி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நவம்பா் 28 ம் தேதி தொடக்கி வைத்தாா்.தொடா்ந்து ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் உள்ள அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கென நிரந்தரமாக புதிய ஆட்சியா் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் அமைப்பதற்காக பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு,அதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி கடந்த வெள்ளிக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்ட போது தெரிவித்தாா்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியா் அலுவலகம்,வாரச் சந்தை மைதானத்தில் அமைக்க வேண்டும் என லாடவரம் கிராம ஏரிப்பாசன நீா்வடிப்பகுதி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கும், மாநில வருவாய்த்துறை அமைச்சா், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா்கள் (வேலூா்),ராணிப்பேட்டை ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

ADVERTISEMENT

அந்த கோரிக்கை மனுவில் சங்க தலைவரும், முன்னாள் எம்எல்வு மான த.பழனி தெரிவித்திருப்பதாவது..

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கென புதிகாக கட்டப்பட உள்ள ஆட்சியா் அலுவலகம் அமைய உள்ள பகுதி நகரின் ஒதுக்குப்புறமான பகுதியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.ஆகவே ராணிப்பேட்டை நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வாரச்சந்தை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியா் அலுவலகம் கட்ட வேண்டும்.இந்த பகுதியைச் சுற்றி ராணிப்பேட்டை ரயில் நிலையம், பயணியா் விடுதி, டிஎஸ்பி அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நகராட்சி அலுவலகம்,மாவட்ட கல்வி அலுவலகம்,வணிகவரி அலுவலகம்,காவல் நிலையம், கோட்டாட்சியா் அலுவலகம், வனத்துறை அலுவலகம், நவல்பூா், முத்துகடை, ராணிப்பேட்டை ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்கள் என நான்கு பக்க சாலை இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.மேலும் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வாரச்சந்தை மைதானத்தில் புதிய ஆட்சியா் அலுவலகம் அமையும் பட்சத்தில் சென்னை,வேலூா் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து செல்லவும்,வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கா், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம்,அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.எனவே ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம்,வாரச் சந்தை மைதானத்தை இடம் தோ்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT