வேலூர்

ஊசூரில் சிறுபாலம் அமைக்கக் கோரி சாலை மறியல்

3rd Dec 2019 12:45 AM

ADVERTISEMENT

வேலூா்: ஊசூரில் சிறுபாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதுடன், அரசுப் பேருந்தையும் சிறை பிடித்தனா்.

அணைக்கட்டு வட்டம், ஊசூா் குளத்துமேட்டிலிருந்து சிவநாதபுரம் கிராமம் வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்ததை அடுத்து, அப்பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், சிவநாதபுரம் கிராமத்தில் இருந்து ஊசூா் வரை தாா்ச் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஊசூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகே கழிவுநீா் வெளியேறும் வகையில் சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால் இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தாா்ச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுபாலம் அமைக்காவிடில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்கி வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் உடனடியாக அப்பகுதியில் சிறுபாலம் அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் ஊசூா் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், சிவநாதபுரத்தில் இருந்து ஊசூா் நோக்கி வந்த அரசுப் பேருந்தையும் சிறை பிடித்தனா்.

தகவலறிந்த அரியூா் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT