புதிதாகப் பிரிக்கப்படும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடம்பெறும் வட்டங்கள், ஒன்றியங்கள், பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் அந்தந்த மாவட்டத்துக்கு உள்ளேயே இடம்பெற வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு கூடுதலாக இரு மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்தியகோபால் தலைமை வகித்தார். ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதில், பேர்ணாம்பட்டு நுகர்வோர் நலன் பாதுகாப்புச் சங்கத் தலைவர் டி.பஷீருத்தீன் பேசியது:
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரு வருவாய்க் கோட்டங்களாவது இருக்க வேண்டும் என்பதால் குடியாத்தம், ஆம்பூர், அரக்கோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இடம் பெறும் ஜோலார்பேட்டை, ஆலங்காயத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக இரு வட்டங்களும், உத்தேச ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம்பெறும் ராணிப்பேட்டை, சோளிங்கரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக இரு வட்டங்களும் உருவாக்க வேண்டும்.
புதிய மாவட்ட எல்லைகளை வரையறை செய்யும்போது சில பகுதிகள் வருவாய்க் கோட்டத்தின் எல்லைக்குள் வந்தாலும் மாவட்ட தலைமையிடத்துக்கு தொலைவில் இருக்கும்பட்சத்தில் அவற்றை அருகே உள்ள மாவட்டத்துடன் மட்டுமே இணைக்க வேண்டும். புதிதாக மாவட்டங்களை உருவாக்கும்போதே அவற்றுக்குத் தேவையான அதிகாரிகள், ஊழியர்கள் முழு அளவில் நியமிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பொன்.வள்ளுவன் பேசியது:
மாவட்டம் பிரிப்பதன் மூலம் பேர்ணாம்பட்டு வட்டம் புதிய வேலூர் மாவட்டத்தில் இடம்பெற உள்ளது. கல்வி மாவட்டமாக பார்த்தால் பேர்ணாம்பட்டு வட்டம் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ளது. வாணியம்பாடியானது திருப்பத்தூர் மாவட்டத்தில் இடம்பெற உள்ளது. எனவே, நிர்வாக நலன்கருதி வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்ததுபோல், புதிய வேலூர் மாவட்டத்தை இரு கல்வி மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும்.
இதேபோல், பேர்ணாம்பட்டு ஒன்றியம் வேலூர், திருப்பத்தூர் ஆகிய இரு மாவட்டங் களிலும் பிரிந்து செல்கிறது. இதனால், பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகத்தில் ஏற்படும் இடையூறுகளை கவனத்தில் கொண்டு பேர்ணாம்பட்டு ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து ஒன்றியங்களின் எல்லைகளையும் மாவட்டத்துக்குள் வரும்படி வரையறை செய்து கொடுக்க வேண்டும். இதேபோல், பேரவைத் தொகுதி எல்லைகளும் மாவட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்.
அதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். வேலூர் மாவட்ட வணிகர் சங்கப் பேரவை பொதுச் செயலர் ஆர்.பி.ஞானவேலு பேசியது:
வேலூர் மாவட்டத்தின் தலைநகரமான வேலூரை பொலிவுறு நகரமாக உருவாக்க ரூ. 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது வேலூர் மாவட்டத்தை 3 மாவட்டமாக பிரித்தால் அது தடைபடும். மேலும், வேலைவாய்ப்பு கொண்ட தொழிற்சாலைகள் திருப்பத்தூர், ராணிப்பேட்டைக்குச் சென்றுவிடும். எனவே, அரசு அறிவித்துள்ளபடி வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்காமல் வேலூர், திருப்பத்தூர் என இரு மாவட்டங்களாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் அப்பு பேசியது:
காட்பாடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவலம் பேரூராட்சி, 9 ஊராட்சிகள் வாலாஜாபேட்டை தாலுகாவில் உள்ளன. அவற்றை காட்பாடி தாலுகாவில் இணைக்க வேண்டும். மேலும், வள்ளிமலை, பொன்னை உள்ளிட்ட 20 ஊராட்சிகள் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ளன. அவற்றையும் காட்பாடி தாலுகாவில் இணைத்து வேலூர் மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், கணியம்பாடி, அகரம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைக் கூறினர்.அதில், வேலூருக்கு மிக அருகே உள்ள கணியம்பாடியை ராணிப்பேட்டை மாவட்டத்துடனும், அகரம் பகுதியை திருப்பத்தூர் மாவட்டத்துடனும் சேர்க்கக் கூடாது.
இவ்விரு பகுதிகளையும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலேயே நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்றனர்.
இறுதியாக கூடுதல் தலைமைச் செயலர் கே.சத்தியகோபால் பேசுகையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்து மாவட்டங்கள் பிரிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாணியம்பாடியில் சலசலப்பு
வாணியம்பாடியில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்டம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்தியகோபால் தலைமை வகித்தார். ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 225 பேர் தங்களது மனுக்களை மாவட்டம் பிரிப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வாகவும், ஏற்கெனவே பெயர்களை பதிவு செய்த 135 பேரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை திருப்பத்தூர் நகரம் அல்லது நகரத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைய வேண்டும் எனக் கூறினர். ஆனால், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, மாதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாணியம்பாடியை ஒட்டியோ அல்லது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மின்னூர், கோடியூர் பகுதிகளில் அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும் எனக் கூறினர்.
இந்நிலையில், ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ்பாபு, அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து சில கருத்துகளைக் கூறினாராம். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலர் ஓம்பிரகாஷ், வாணியம்பாடி தொகுதி செயலர் கோவேந்தன் உள்ளிட்டோர் திடீரென தர்னாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரமேஷ்பாபு கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜி, காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா, நகர அதிமுக செயலர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.