கே.வி.குப்பம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்முட்டுக்கூர் ஊராட்சியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த தரணி (27), லலித்குமார் (27) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.வி. குப்பம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களின் 2 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து பனமடங்கி போலீஸார் வழக்குப் பதிந்து தரணி, லலித்குமார் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். தரணி கொடுத்த புகார் தொடர்பாக கே.வி. குப்பம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாமகவினர் கே.வி. குப்பம் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி என்.சரவணன், கே.வி. குப்பம் ஆய்வாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து தரணி கொடுத்த புகாரின்பேரில் கோபி (24), விஷ்ணு (23), சக்திவேல் (20) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளஇருவரை தேடி வருகின்றனர்.