ஒரு பிரச்னையை மறைக்க மற்றொரு பிரச்னையை எழுப்புவது திமுகவின் வழக்கம். பாஜக ஒருபோதும் அவ்வாறு செயல்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
வேலூரில் புதன்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது. தவிர்க்க முடியாத சக்தியாக அவர் உருவெடுத்துள்ளார். காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு தற்போது மறுசீரமைப்பு நடந்து வருகிறது. 23 நாள்களுக்குப் பிறகுதான் ராகுல் காந்திக்கு ஞானம் பிறந்துள்ளது. அவர் இப்போதுதான் காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்றும், பாகிஸ்தான் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையைத் தாமதமாகப் புரிந்து கொண்டுள்ளார். நல்லவேளை இவர்கள் கையில் நாடு கிடைக்கவில்லை. இல்லையேல், மக்களுக்கான திட்டங்களும் தாமதமாகத் தான் கிடைத்திருக்கும். அதேசமயம், ராகுல் காந்திக்கு தெரிந்தது மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அயல் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாடு திரும்பியதும், தமிழக வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை அரசியலாக்குகின்றனர். ஆனால் மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசு செயல்படுகிறது. ஒரு பிரச்னையை மறைக்க மற்றொரு பிரச்னையை கையில் எடுப்பது திமுகவின் வழக்கம். பாஜக ஒருபோதும் அவ்வாறு செயல்படாது.
பொருளாதார பின்னடைவு என்பதை பார்க்காமல் அதைச் சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை இந்திய ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவல் துரதிஷ்டவசமானது. அதை ஒடுக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.