அரக்கோணம் நகரில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புதைசாக்கடைப் பணிகள் நிறைவுற்ற போதிலும், சாலைகள் சீர்படுத்தப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரக்கோணம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதைசாக்கடை திட்டப்பணிகள் ரூ. 98 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. பின்னர், கூடுதல் நிதியாக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆள்நுழைவு குழிகள், வீடுகளுக்கு இணைப்புப் பாதை ஏற்படுத்தும் பணி, கழிவுநீர் செல்லும் குழாய்கள் அமைக்கப் பாதை ஏற்படுத்தும் பணி, கழிவுநீர் சேகரிக்கும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என நான்கு ஆண்டுகளாக இப்பணி நடைபெற்று வந்தது. தற்போது இப்பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.
இப்பணிக்காக நகரில் அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளிலும் புதைசாக்கடை திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் தோண்டினர். ஆனால், தோண்டப்பட்ட பள்ளங்களை அவர்கள் சரிவர மூடாமல் சாலைகளை மேடும், பள்ளமுமாக விட்டு விட்டனர். இதனால் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர்.
குறிப்பாக, அரக்கோணம் பழனிபேட்டையில் வி.பி. கோயில் தெரு, ஆர்.சி.எம். பள்ளித் தெரு, டில்லியப்பன் தெரு, சுவால்பேட்டையில் ராஜாஜி தெரு, வள்ளலார் தெரு, கணேஷ் நகர் பிரதான சாலை, ராஜாஜி தெரு, தலைமை தபால் நிலையத் தெரு, சத்தியமூர்த்தி தெரு, சரோஜினி தெரு, டவுன்ஹால் 1 முதல் 7 வரையிலான தெருக்கள், பிள்ளையார் கோயில் தெரு, நேருஜி நகர் 8-ஆவது தெரு என நகரின் அனைத்து தெருக்களுமே மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்றவையாக உள்ளன.
இதுகுறித்து நகராட்சியில் எப்போது புகார் அளித்தாலும் விரைவில் பணி ஆரம்பிக்கப்பட்டு விடும். சாலை போட நிதி ஒதுக்கி ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு விட்டன. விரைவில் சாலை அமைக்கும்பணி தொடங்கப்படும் என கடந்த ஒன்றரை வருடமாக கூறி வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறியது: சிமெண்ட் சாலைகள் அமைக்க மணல் அவசியம். தற்போது மணல் விலை ஒப்பந்தக் காலத்தில், குறிப்பிட்டதை காட்டிலும் 4 மடங்கு அதிகரித்து விட்டது. அப்படியிருந்தும் மணல் தட்டுப்பாடு நீடிக்கிறது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அரக்கோணம் நகராட்சியில் பல்வேறு காரணங்களைக்கூறி பணி முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க மறுத்து வருகின்றனர்.
ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த போதிலும் அதிகாரிகள் பணி முடித்த நிதியை வழங்க மறுக்கின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டும் சுமார் ரூ. 2 கோடிக்கு மேல் பணி முடித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொகை வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். இதனால் பணிகளை மேற்கொள்ள எங்களால் இயலவில்லை என தெரிவிக்கின்றனர்.
நகராட்சித்தரப்பில் கூறுகையில், வி.பி கோயில் தெருவில் பணிகளைத் துவக்கிய போது அப்பகுதியைச் சேர்ந்த நகர அரசியல் கட்சி பிரமுகர், சாலைப் போடும் பணியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். நகரில் சாலை அமைக்கும் பணிக்குத் தடை உத்தரவு பெற்றுள்ளதால் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து நகராட்சி வழக்குரைஞர் மூலம் வாதிட்டு வருகிறோம். இதில் நகராட்சிக்கு சாதகமான உத்தரவு வர உள்ள நிலையில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
புதைசாக்கடைப் பணிக்காக தமிழக அரசு ரூ. 118 கோடி நிதி ஒதுக்கி அந்நிதியை அரக்கோணம் நகராட்சி கணக்கிற்கு மாற்றி விட்டது. தற்போது அந்நிதி நகராட்சி வங்கிக் கணக்கில் வைப்புத்தொகையாக உள்ளது. இந்நிதியில் இருந்துதான் புதை சாக்கடை சாலை அமைக்கும் பணிக்கு நிதி வழங்க வேண்டும். ஆக நிதி இருப்பில் இருந்தும் நகராட்சி அதிகாரிகள் நிதியை அளிக்க மறுப்பதன் காரணம் தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் முருகேசனிடம் கேட்டபோது, சாலை அமைக்கும் பணியில் பல பிரச்சினைகள் உள்ளன. மணல் தட்டுப்பாடு, புதைசாக்கடைத் திட்டம் முடிவடைந்த பகுதிகளுக்கான பட்டியல் குடிநீர் வடிகால் வாரிய புதை சாக்கடை கோட்ட அலுவலகத்தில் இருந்து வராமல் இருப்பது, ஒப்பந்ததாரர்கள் பிரச்சினை ஆகியவை உள்ளது. பலவற்றையும் சரி செய்து பணிகளை தற்போது துவக்கியுள்ளோம்.
ஒருபுறம் நீதிமன்ற வழக்குகளும் பணிகளைத் துவக்க முடியாமல் இருக்க காரணமாக உள்ளது. அதையும் நீதிமன்றத்தில் விளக்கி பணிகளை தொடங்கியுள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் அரக்கோணம் நகரில் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் துவங்கும். இரண்டு மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்பட்டு விடும் என்றார்.
இப்பணிகளை மேற்பார்வையிட வேண்டிய வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பிரச்னைகளைத் தீர்த்து சாலை அமைக்கும் பணிகளை விரைந்து அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதிக்கட்டப்பணிகள் நிறைவடைந்து இத்திட்டம் பயனுக்கு வர வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பம்.