அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 4 தினங்களாக மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-இன்படி ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், முதுநிலை நீட் தேர்வு மூலம் பறிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வாலாஜா மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, சோளிங்கர் அரசு மருத்துவமனை உள்பட 13 தாலுகா மருத்துவமனைகள், 80 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 500 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், சுமார் 450 மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதேசமயம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றினர். இதனால், அவசர சிகிச்சைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியது :
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் கடந்த 4 தினங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, மாநிலம் தழுவிய அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேசமயம், அவசர சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்றது. உள்நோயாளிகள் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டன. அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.