வேலூர்

தொழுநோய் கண்டறிய 1,760 குழுக்கள் அமைப்பு

23rd Aug 2019 07:47 AM

ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மாவட்டம் முழுவதும் 1,760 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
தொழுநோய் இல்லாத மாவட்டமாக வேலூரை மாற்றுவதற்காக வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை தீவிர மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஒன்றியம், நகரப்புறங்களில் என மொத்தம் 1,760 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண், ஒரு பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் வீடு வீடாகச் சென்றும், முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உள்ளனர். 
இதுதவிர, பள்ளி மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்ய தனியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மருத்துவ அலுவலர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தொழுநோய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT