வேலூர்

மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2019 06:37 AM

ADVERTISEMENT

நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. 
வேலூர் ஸ்ரீபுரம், நாராயணி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிகளின் இயக்குநர் எம்.சுரேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். இங்கிலாந்தைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய்பிரசாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 
காட்பாடி  வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலர் செ.நா.ஜனார்த்தனன் தேசியக் கொடியேற்றினார். 
காட்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்   தேசியக் கொடி ஏற்றப்பட்டது.  
ராணிப்பேட்டையில்...
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ  ஆர்.காந்தி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து, 1,280 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வாழ்த்தினார். மேலும், வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பேரவை உறுப்பினர் தொகுதி  நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைத் இயக்கி வைத்தார். 
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முத்துக்கடை காந்தி சிலை முன் சுதந்திரப் போராட்டத் தியாகி கல்யாணரான் ஐயரின் மகள் பாரதி தேசியக் கொடி ஏற்றினார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.அண்ணாதுரை, நிர்வாகிகள் எ.வசீகரன், முருகேஷ், ராணி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் டி.பி. சாந்தி தேசியக் கொடியை  ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தியாகிகளின் மனைவிகளான கனகவள்ளி முனியப்பன், ராஜேஸ்வரி ஜெயராமன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். 
நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிப் பொறியாளர் ஜி.உமாமகேஸ்வரி தேசியக் கொடியேற்றினார். திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைவர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகிகள் கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமையாசிரியை என்.மலர்கொடிஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி, நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியேற்றப்பட்டது. 
குடியாத்தம் கிளைச் சிறையில் கண்காணிப்பாளர் ரா.பூஜேந்திரன் கொடியேற்றி, கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார். 
நெல்லூர்பேட்டை சரஸ்வதி மெட்ரிக் வித்யாலயா பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியேற்றப்பட்டது. 
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் கோபு தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி மேலாளர் ரவி முன்னிலை வகித்தார். 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர்கள் மோகன், குமரன் ஆகியோருக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ்கள், 10 ஆண்டுகள் பணியாற்றிய ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்திக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழை ஆணையர் வழங்கினார். 
காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் சமூக ஒற்றுமை விழிப்புணர்வுப் பேரணி காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து கச்சேரி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றினார்.
சிகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவர் மணி தலைமையில் வழக்குரைஞர் வரதராஜன் தேசியக் கொடி ஏற்றினார்.   
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் கொடி ஏற்றினார். டிவிகேவி உயர்நிலைப் பள்ளியில் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் இணைச் செயலர் சுரேஷ்பாபு தேசியக் கொடி ஏற்றினார். 
அரக்கோணத்தில்....
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். குடிமை பொருள் வழங்கல் துறை துணை வட்டாட்சியர் மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சு.முருகேசன் தேசியக் கொடியை ஏற்றினார். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் செந்தாமரை தேசியக் கொடியை ஏற்றினார்.
அரக்கோணம் நகர காங்கிரஸ் சார்பில் சுவால்பேட்டை காமராஜர் உருவச்சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணாரவி தலைமையில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பி.ராஜ்குமார் கொடி ஏற்றினார். 
நகர ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜனதாசேகர், நகர பாஜக தலைவர் ஜெகன்மோகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சு.ரமேஷ் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அதன் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் கொடி ஏற்றினார். செயலர் டி.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கே.சாம்பமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காவனூர் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி, புளியமங்கலம் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஆம்பூரில்...
ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் தேசியக் கொடியேற்றினார். பொறியாளர் எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூப்பர் நேஷன் பார்ட்டி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. ஆம்பூர் நகர வர்த்தகர் சங்க அலுவலகத்தில் தலைவர் கே.ஆர். துளசிராமன் கொடியேற்றினார். ஆம்பூர் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர். கஜேந்திரன் தலைமையில் தலைவர் வி.எம். இப்ராஹிம் கொடியேற்றினார்.
ஆம்பூர் நகர தமுமுக, மமக சார்பில் மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத் தலைமையில் நகரக் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராமன் தேசியக் கொடியேற்றினார்.
ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தண்டபாணி தேசியக் கொடியேற்றினார். ஆம்பூர் கன்னிகாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கத் தலைவர் ந. கருணாநிதி தேசிய கொடியேற்றினார். ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்க தலைவர் சி.குணசேகரன் தேசிய கொடியேற்றினார். தக்ஷிலா குளோபல் பள்ளியில் பள்ளிச் செயலர் ஆனந்த் சிங்வி கொடியேற்றினார்.
கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் த.ராஜமன்னன், ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர் என். ரபீக் அஹமத் தேசியக் கொடியேற்றினர்.
ஸ்ரீவித்ய விஹார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் 150 அடி நீள தேசியக் கொடியை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ஆற்காட்டில்...
ஆ ற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல்லூரித் தாளாளர் டி.தரணிபதி தலைமையில் பொருளாளர் பி.பாலகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினார். இயக்குநர்கள் எம்.சங்கர், எஸ்.ரமேஷ், நிர்வாக அலுவலர் எஸ்.ஆதிகேசவன், முதல்வர் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன், கல்லூரித் தலைவர் கே.குப்புசாமி, செயலர் ஜி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரி, மெட்ரிக் பள்ளியில் கல்லூரித் தலைவர் ஏ.கே.நடராஜன் தேசியக் கொடி ஏற்றினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அதன் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தேசியக் கொடி ஏற்றினார். ஆற்காடு ஆண்டாள் அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ரா.பிரபாகரன் கொடி ஏற்றினார்.
ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் துணை மேலாளர் வெ.ராஜதுரை தேசியக் கொடி ஏற்றினார். திமிரி வேத வித்யா பப்ளிக் பள்ளியில் திமிரி காவல் ஆய்வாளர் காண்டீபன் தேசியக் கொடி ஏற்றினார். தாளாளர்  செல்விராமசேகர், முதல்வர் அருண்குமார், நிர்வாக இயக்குநர் ராமசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT