வேலூர்

சுதந்திர தின விழாவில் ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கினார்

16th Aug 2019 06:34 AM

ADVERTISEMENT

சுதந்திர தினவிழாவையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 68 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 684 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, கோட்டை முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர், நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்ததுடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையிலான காவலர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள் என 50 பேருக்கு கதர் ஆடை அணிவித்து ஆட்சியர் மரியாதை செய்தார்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 684 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 203 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வேலூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அக்சீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேலப்பாடி வி.கே.வி.எம்.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை எல்.எஃப்.சி.  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் சாயி குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர் சரக சிறைத் துறை துணைத் தலைவர் ஜெயபாரதி, மாவட்ட வருவாய்  அலுவலர் ஜெ.பார்த்தீபன்,  மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவைத் தொடர்ந்து, வேலூர் நேரு பூங்கா எதிரே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க பார்வையற்ற பள்ளிக் குழந்தைகள் மையம், வேலூர் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள அலுவலர் குழும வளாகம் ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் ஆட்சியர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT