வேலூர்

நாளை பக்ரீத் பண்டிகை: ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

11th Aug 2019 12:54 AM

ADVERTISEMENT


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமுகத்தினர் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை குவிந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற வாரச் சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம். 
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வாரச் சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகை நாள்களின்போது விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரச் சந்தையில் ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது. 
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை விலைபோனது. அதன்படி வெள்ளிக்கிழமை ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT