வேலூர்

அனைவரது இல்லங்களிலும் கம்பராமாயணம் இருக்க வேண்டும்: புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து

11th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT


அனைவரது இல்லங்களிலும் கம்பராமாயணம் இருக்க வேண்டும் என புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து பேசினார்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை தொடங்கிய கம்பன் விழாவில் பங்கேற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலருமான வே.பொ.சிவக்கொழுந்து பேசியது: 
அனைவரது இல்லங்களிலும் கம்பராமாயண நூல் இருக்க வேண்டும். பரம்பொருள் மனித அவதாரமெடுத்து, நல் ஒழுக்கம், கட்டுப்பாடு, குரு மற்றும் பெரியோர்களை மதித்தல், வீரம், விவேகம் எனும் நற்பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ராமனின் காவியத்தை அழகாக, நேர்த்தியாக வடித்தவர் கம்பர். உலகம் உள்ளவரை கம்பரை இந்த தமிழ் உலகம் மறக்காது. கம்பன் நம் தமிழின் அடையாளம். கம்பரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக வருகின்ற அக்டோபர் மாதம் 5, 6-ஆம் தேதிகளில் ஸ்விட்சர்லாந்தில் கம்பன் கழகத்தின் உலக மாநாடு நடைபெற உள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கம்பராமாயணத்தைப் படித்து, அதன்படி நடக்க வேண்டும். அது மட்டுமல்லாது பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கம்பன் விழாக்களில் இளைஞர்கள் தாமாக முன் வந்து செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி பேசுகையில், கம்பனின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், கம்பராமாயணம் குறித்து சிறப்பாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர், பேச்சாளர், நூல் எழுதியவர் என 3 நபர்களைத் தேர்வு செய்து, திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் விருது மற்றும் நினைவுப் பரிசு அளிக்கப்படும் என்றார்.
இதையடுத்து, கம்பராமாயண நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, ஓவியக் கண்காட்சி, நாணயக் கண்காட்சி, கல்வெட்டுகளின் நிழற்பட கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT