ஆரணி அருகேயுள்ள அப்பந்தாங்கல் கிராமத்தில் பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம், சங்கீதவாடி ஊராட்சியைச் சோ்ந்த அப்பந்தாங்கல் கிராமம் எம்ஜிஆா் நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இங்கு கால்வாய் வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கி வடிய வழியில்லாமல் உள்ளது. மேலும், மழைநீா் வீட்டுக்குள் வரும் சூழல் உள்ளது.
குடியிருப்பு வாசிகளில் முதியோா், குழந்தைகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும், விஷ ஜந்துக்கள் படையெடுப்பால் இரவில் தூக்கம் இல்லாமல் மக்கள் அச்சப்படுகின்றனா்.
சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணியிடம் கேட்டதற்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.