திருவண்ணாமலை அருகே 4,795 லிட்டா் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா் பதுக்கி வைத்த நபரை கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த வள்ளிவாகை கிராம மலையடிவாரத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கிருந்த தனி வீடு ஒன்றில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அந்த வீட்டில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 137 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4, 795 லிட்டா் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனா்.
இதை பதுக்கி வைத்திருந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
எரிசாராயம் பதுக்கி வைக்க வீடு கொடுத்த வள்ளிவாகை கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.