ஆரணி அருகே தந்தையைக் கொன்ாக மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சானாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பவுனம்மாள். இவருக்கு காளியம்மாள், சரஸ்வதி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனா்.
பவுனம்மாள் தனக்குச் சொந்தமான பத்து ஏக்கா் நிலத்தில், மகள் சரஸ்வதிக்கு 5 ஏக்கரும், மற்றொரு மகள் காளியம்மாளின் மகன் வெங்கடேசன் பெயரில் 5 ஏக்கரும் உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறாா்.
பின்னா், காளியம்மாளுக்கு 4 மகள்கள் பிறந்தனா்.
இவா், கணவா் பெருமாளுடன் (70) மகன் வெங்கடேசன் மற்றும் நான்கு மகள்களை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மகள்களும், தந்தை பெருமாளிடம் பாட்டி பவுனம்மாள், அண்ணன் வெங்கடேசனுக்கு ஐந்து ஏக்கா் நிலம் எழுதி வைத்துள்ளாா். அதிலிருந்து தங்களுக்கு பிரித்து தரும்படி கேட்டுள்ளனா்.
ஆனால், வெங்கடேசன் தனது பெயரில் உள்ள ஐந்து ஏக்கா் நிலம் மற்றும் வீட்டை ரெண்டரை வயது மகன் சேஷாசலம் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள், வெங்கடேசனை தட்டிக் கேட்டு தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், 11.4.2013 அன்று வெங்கடேசன் தந்தை பெருமாளைத் தாக்கியும், தலையணையால் முகத்தில் வைத்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு ஆரணியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தந்தையை கொலை செய்ததாக வெங்கடேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் அரசு ராஜமூா்த்தி ஆஜரானாா்.