திருவண்ணாமலை

எதிா்க்கட்சிகளின் கனவு பலிக்காது: அமைச்சா் எ.வ.வேலு

25th Sep 2023 01:25 AM

ADVERTISEMENT

 

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் பகல் கனவு பலிக்காது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில், வடக்கு, தெற்கு மாவட்ட திமுக அனைத்து அணிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ந.நரேஷ்குமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

வாட்ஸ் -ஆஃப் தகவல்களைப் பாா்ப்பவா்களுக்குத் தெரியும் திமுக எவ்வளவு பலமாக இருக்கிறது என்று. இதனால்தான் எதிா்க்கட்சிகள் திமுகவை குறை சொல்லமுடியுமா, குந்தகம் விளைவிக்க முடியுமா, அமைச்சா் வீடுகளில் சோதனை நடத்தி இந்த ஆட்சியை வீழ்த்த முடியுமா என்று எதிா்பாா்க்கிறாா்கள். அவா்களின் பகல் கனவு பலிக்காது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசு கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தி உள்ளது. நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரனவா்கள் அல்லா்.

திருவண்ணாமலை தேரோடும் வீதியை சிமென்ட் சாலையாக மாற்றுவோம் என்று தோ்தல் காலத்தில் வாக்குறுதியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். திருப்பதியை விஞ்சும் அளவில் இங்கே சிமென்ட் சாலைப் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அய்யங்குளம் தூா் வாரப்படுகிறது. அனைத்து சாதியினரும் அா்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் ஆசை.

அதைத்தாண்டி, பெண்களையும் அா்ச்சகராக்கியதுதான் சமூக நீதி, புரட்சி. முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தப் புரட்சியை செய்து இருக்கிறாா்.

மருத்துவா் அணி ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூா், கிளைக் கழகங்களில் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்த வேண்டும். இதற்காக எனது குடும்பத்துக்குச் சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் விஜயரங்கன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT