திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, வேளாண் இணை இயக்குநா், சி.ஹரிக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) க.உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டு, விவசாயிகளுக்கு வழங்கினாா். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பேசினா்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது: தமிழக அரசு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 37 மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளால் ஏற்பட்ட சுமாா் 7 லட்சம் ஏக்கா் பரப்பளவு மகசூல் இழப்புக்காக ரூ.560 கோடி இழப்பீட்டு தொகை ஒதுக்கி ஆணை பிறப்பித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் மாதம் விவசாயிகள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலையம், கால்நடை கல்லூரி அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்டத்தில் ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்குப் பயிா் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பருவத்துக்கு ஏற்ப தரமான பழச்செடிகள், காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளா் கவுரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.