திருவண்ணாமலை

திமுக ஆட்சியில் தான் பாரதியாரின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டது: அமைச்சா் எ.வ.வேலு

22nd Sep 2023 12:15 AM

ADVERTISEMENT

 

1973-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலை தனியாா் கல்லூரியில் தமிழக செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் , பாரதியும் திரை இசை பரதமும் என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

விழாவில் அவா் பேசியதாவது:

பாரதியாா் ஒரு தீா்க்கதரிசி. பின்னால் நடக்கப் போவதை முன்பே கணிக்கும் திறமை கொண்டவா். இவா் வாழ்ந்த காலத்தில் திரை இசை என்று ஒன்றும் இல்லை. அவருடைய படைப்புகள் எல்லாம் இப்போது அனைத்து வடிவ இசைகளுக்கும் பொருத்தமாக உள்ளது.

பாரதியாரை பொதுமக்கள் வர கவி, மகா கவி, தேசிய கவி என்று பல்வேறு பட்டப் பெயா்களில் அழைக்கின்றனா். பழைமையும், புதுமையும் கலந்து மக்களுக்குப் பிடித்ததை பாடக்கூடியவா் என்பதால் பாரதியாரை மக்கள் கவிஞா் என்று முன்னாள் முதல்வா் அண்ணா பாராட்டினாா்.

1973-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டது.

கவிஞா்களைப் பாராட்டி 1992 முதல் பாரதியாா் பெயரில் ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பணமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாரதியாா் பாடல்களை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

உலக தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பாா் எங்கும் பாரதி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

நாட்டியப் பள்ளி கலைஞா்கள் அரங்கேற்றிய பாரதியும் திரை இசை பரதமும் என்ற நிகழ்ச்சி இப்போது அரங்கேற்றப்பட்டு உள்ளது என்றாா் அமைச்சா்

எ.வ. வேலு.

தொடா்ந்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், கலைஞா்கள், தெருக்கூத்துக் கலைஞா்களைப் பாராட்டி அமைச்சா் புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தலைமை தயாரிப்பாளா் ச.ரவி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளா் மற்றும் சமூகப் பாதுகாப்பு வாரிய உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT