திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் பலியாகினா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த எலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளவரசு (40). இவா், திருப்போரூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி மீனாட்சி(35). இவா்களது மகள் பிரசாந்தினி(5), மகன் பிரவீன்(3).
இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற உறவினா் குழந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் சென்று பங்கேற்ற இளவரசு, நள்ளிரவு காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை இளவரசு ஓட்டினாா்.
வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, சாலவேடு கிராமம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் நிலை தடுமாறி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த இளவரசு, மீனாட்சி, பிரசாந்தினி, பிரவீன் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு பிரவீனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
பின்னா் இளவரசு, பிரசாந்தினி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியில் இளவரசு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.