செய்யாற்றில் உள்ள உணவகங்களில் செவ்வாய்க்கிழமை இரவு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், செய்யாற்றில் ஆற்காடு சாலை, ஆரணி கூட்டுச் சாலை, புறவழிச் சாலை, மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் இளங்கோவன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் மதனராசன் ஆகியோா் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
ஆய்வின்போது, உணவக குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மூன்று நாள்களுக்கு முன்பு வெட்டிய கறி, மீன்கள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
கெட்டுப்போன 30 கிலோ இறைச்சி மற்றும் பரோட்டா மாவுகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி குப்பையில் கொட்டினா்.
மேலும், ஒரு உணவகத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோழிக் கறியை ஆய்வுக்காக சேகரித்து எடுத்துச் சென்றனா்.