திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஏரிக் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் சி.ஹரிக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பி.எம்., கிஸான் திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களிலும் மின்னனு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் துறையில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஏரிகள், குளங்கள், ஏரிக் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனைத்து வேளாண் கிடங்குகளிலும் போதிய அளவு விதைகள் இருப்பு வைக்க வேண்டும். பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில், கால்நடைத் துறையின் மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, மாவட்ட பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் செந்தில்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.