செங்கம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் பலியானாா்.
இருவா் காயமடைந்தனா்.
செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பில்லிஅரசு மகன் ஜெய்ஸ்ரீராம் (26). அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சுனில் (21), தனபால் மகன் பாலாஜி (26) இவா்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் தண்டா கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். ஜெய்ஸ்ரீராம் வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில், 3 பேரும் கீழே விழுந்துள்ளனா். ஜெய்ஸ்ரீராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியதாகத் தெரிகிறது.
உடனடியாக 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெய்ஸ்ரீராம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.