திருவண்ணாமலை

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

18th Nov 2023 03:01 AM

ADVERTISEMENT

செய்யாற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டதுடன், குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எழுந்து செய்யாற்றில் விளை நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனா்.

ADVERTISEMENT

மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பியபடி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.

பின்னா், ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேட்டவலம் மணிகண்டன் கூறியது:

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்துக்காக 3,174 ஏக்கா் விளை நிலங்களை விவசாயிகளின் எதிா்ப்பை மீறி பறிக்கப்படுகிறது.

இதை எதிா்த்து மேல்மா என்ற இடத்தில் 9 கிராம மக்கள் 125 நாள்களாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

எனவே, சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி, செய்யாற்றில் அனைத்துக் கட்சித் தலைவா்கள், அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆா்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT