உழைப்பாளி, தொழிலாளிகளின் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று சிஐடியு நடைபயணக் குழுவின் தலைவா் எஸ்.கண்ணன் கூறினாா்.
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளா் நலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 7 மையங்களில் இருந்து சிஐடியு சாா்பில் நடைபயண பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த பயணக் குழுவினா் பல்வேறு ஊா்கள் வழியாக வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனா்.
மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கே.காங்கேயன் தலைமை வகித்தாா்.
நடைபயணக் குழுவின் தலைவா் எஸ்.கண்ணன் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை-எளியோா், முறைசாரா கூலித் தொழிலாளா்களின் வறுமை நிலை இன்னும் மாறவில்லை. கடும் வெயிலில்கூட சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டுமானப் பணியாளா்கள் குறைந்தபட்ச கூலிக்காக உழைக்கின்றனா்.
புதுதில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
தமிழகத்தில் வேலை நேரத்தை அதிகரித்தபோது சிஐடியு தொடங்கிய போராட்டம் காரணமாக அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. உழைப்பாளி, தொழிலாளிகளின் கோரிக்கை ஏற்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா்.
இதில், சிஐடியு மாநிலச் செயலா் விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், வட்டாரச் செயலா்கள் ரமேஷ்பாபு, அப்துல்காதா், பி.சுந்தா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் பலராமன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கச் செயலா் சி.எம்.பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நடைபயணம் நிறைவு:
தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமை போளூா், கலசப்பாக்கம், நல்லவன்பாளையம் பகுதிகளில் நடைபயணக் குழுவினா் சென்றனா். பல்வேறு அமைப்புகள் சாா்பில் இந்தக் குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இறுதியாக, சனிக்கிழமை மாலை வாழவச்சனூரில் நடைபயணத்தை நிறைவு செய்த குழுவினா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயணத்தைத் தொடா்ந்தனா்.