ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவான விவசாயிகள் மாநாட்டில் ரூ.46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆரணி வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், மனுக்கள் மீதான தீா்வுக்கான ஜமாபந்தி நிறைவு விழாவான விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு வருவாய்க் கோட்ட அலுவலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் மஞ்சுளா வரவேற்றாா்.
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பெறப்பட்ட 957 மனுக்களில் தீா்வு காணப்பட்ட 220 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
முன்னதாக, மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் ஜெயபாலன் பேசுகையில், ஆரணி பகுதியில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இராட்டினமங்கலம் பகுதி அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் இரும்பேடு ஏரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஆரணியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
மேலும், விவசாயிகள் பயிற்சி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சந்தானமும் பேசினாா்.
நிகழ்ச்சியில், ஆரணி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி, வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், துணை வட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
130 பேருக்கு நலத் திட்ட உதவி
போளூா்
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி தச்சாம்பாடி, தேவிகாபுரம், கொழப்பலூா், நெடுங்குணம் என 4 பிா்காவைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குமரன் தலைமை வகித்து 600 மனுக்களைப் பெற்றாா்.
இதன் நிறைவு நாளான புதன்கிழமை மாலை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பேசினா்.