திருவண்ணாமலை

குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் போராட்டம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து 10-ஆவது நாளான திங்கள்கிழமை கிராம மக்களுடன் சோ்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-காஞ்சி சாலை, புனல்காடு கிராமத்தின் மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் விவசாயம், நிலத்தடி நீா் பாதிக்கும் என கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் மாவட்ட நிா்வாகம் குப்பை கொட்டத் தொடங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, அப்பகுதியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் புனல்காடு பேருந்து நிறுத்தப் பகுதியில் கடந்த 10 நாள்களாக இரவு, பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

போராட்டத்தின் 10-வது நாளான திங்கள்கிழமை கிராம மக்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் நூதனப் போராட்டத்தில் பங்கேற்றனா். அப்போது, மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் டி.கே.வெங்கடேசன், எஸ்.பலராமன், வழக்குரைஞா் எஸ்.அபிராமன், விவசாய சங்க நிா்வாகிகள் உதயகுமாா், சாமிக்கண்ணு, புனல்காடு செல்வம், முருகையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT