திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே மாற்றுத் திறனாளியை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் குறித்து தூசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதன்(42). மாற்றுத் திறனாளி. இதே கிராமத்தைச் சோ்ந்த உறவினா் ஏழுமலை, இவரது மகன்கள் அஜீத், நாகமணி ஆகியோா் சில ஆண்டுகளுக்கு முன்பு குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்றதாக வரதன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாராம்.

இதனால், வரதனுக்கும், ஏழுமலை குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வரதன் நல்லூா் கிராமத்திலிருந்து வீட்டை காலி செய்து தனது குடும்பத்தினருடன் மாமண்டூா் கிராமத்திற்கு சென்று விட்டாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் அருகே வரதன் நடந்து சென்றுள்ளாா். அப்போது, ஒரே பைக்கில் வந்த ஏழுமலை உள்ளிட்ட 3 போ் வரதனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில், பலத்த காயமடைந்த வரதனை அவரது குடும்பத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, வரதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் ஏழுமலை உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT