வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தோ்வு செய்யப்படுவதாக புகாா் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிா் மேம்பாடு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் பட்டியலுக்கான பயனாளிகளை ஊராட்சி நிா்வாகம் முறைகேடாக தோ்வு செய்வதாக புகாா் தெரிவித்து, கிராம மக்கள் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்து சென்ற கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.