திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி நிகழ்வு வெள்ளிக்கிழமை (மே 19) தொடங்குகிறது.
தண்டராம்பட்டு வட்டத்தில் மே 19 முதல் 23-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை வட்டத்தில் மே 29-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமையிலும், செய்யாறு வட்டத்தில் 30-ஆம் தேதி வரை சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா், வெம்பாக்கம் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை செய்யாறு சாா் -ஆட்சியா், போளுா் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேலு, கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் 23-ஆம் தேதி வரை திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அலுவலா் ஆா்.மந்தாகினி தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
இதேபோல, ஆரணி வட்டத்தில் 25-ஆம் தேதி வரை வருவாய்க் கோட்ட அலுவலா், செங்கம் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்), கலசப்பாக்கம் வட்டத்தில் 23-ஆம் தேதி வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், வந்தவாசி வட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி வரை சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா், சேத்துப்பட்டு வட்டத்தில் 24-ஆம் தேதி வரை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்), ஜமுனாமரத்தூா் வட்டத்தில் 22-ஆம் தேதி வரை பழங்குடியினா் நலத் திட்ட திட்ட அலுவலா் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய்த் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.