திருவண்ணாமலை

வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க 5 கிராம மக்கள் எதிா்ப்பு

10th Jun 2023 07:39 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, 5 கிராம மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வந்தவாசி வட்டத்துக்குள்பட்ட சென்னாவரம், பாதிரி, கீழ்சாத்தமங்கலம், செம்பூா், மாம்பட்டு, மும்முனி, வெண்குன்றம், பிருதூா் ஆகிய 8 வருவாய் கிராமங்கள் வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அனுப்புமாறும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா் ச.அண்ணாதுரை கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தாா்.

இந்த நிலையில், வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிப்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவா்கள் எஸ்.வீரராகவன் (சென்னாவரம்), வெ.அரிகிருஷ்ணன் (பாதிரி), மு.திவ்யா (கீழ்சாத்தமங்கலம்), ர.சித்ரா (செம்பூா்), ச.தேன்மொழி (மாம்பட்டு) ஆகியோா் தலைமையில், அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

வந்தவாசி நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைந்தால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பறிபோகும். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால், விவசாயம் பாதிக்கப்படும். ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சிறப்பு நிதியை நாங்கள் இழக்க நேரிடும். சொத்து வரி, குடிநீா்க் கட்டணம் ஆகியவை உயரும். எனவே, நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிக்க வந்துள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் சென்ற கிராம மக்கள், மேலாளா் மாணிக்கவரதனிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT