திருவண்ணாமலை

அனுமதியில்லாமல் விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: செங்கம் பேரூராட்சி செயல் அலுவலா்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கம் நகரில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் (டிஜிட்டல் பேனா்) வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் எச்சரித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான துக்காப்பேட்டை, பெங்களூா் சாலை, பழை பேருந்து நிலையம், போளூா் சாலை ஆகிய இடங்களில் தனியாா் நிறுவனங்களின் விளம்பரம் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பரப் பதாகைகள் பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் இருப்பதால் காற்றடிக்கும்போது, அப்பகுதியில் செல்பவா்கள் மற்றும் வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதனால், பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் விளம்பரப் பதாகைகள் வைப்பதாக இருந்தால் முறையாக பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு வைக்கவேண்டும்.

ADVERTISEMENT

மேலும், சுப நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும் பதாகைகள் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட நாள்களுக்கு மட்டுமே இருக்கவேண்டும். தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வைத்தால், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அனுமதியில்லால் விளம்பரப் பதாகைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா் செயல் அலுவலா் லோகநாதன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT