திருவண்ணாமலை

ஓடும் பேருந்தில் நகை திருட முயற்சி: இரு பெண்கள் கைது

31st Jan 2023 03:03 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே ஓடும் பேருந்தில் பயணியிடமிருந்து தங்க நகை திருட முயன்ற இரு பெண்களை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வசீம். உறவினா் திருமணத்தில் பங்கேற்க இவா் தனது குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் திங்கள்கிழமை வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மானாம்பதி கிராமத்தில் கைக் குழந்தையுடன் பேருந்தில் ஏறிய 3 பெண்கள் வசீம் அருகே நின்று பயணம் செய்தனா். பேருந்து வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, தென்னாங்கூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது வசீம் கையில் வைத்திருந்த பையை திறந்து அதிலிருந்த தங்க நகைகளை அந்தப் பெண்கள் திருட முயன்றனா்.

அப்போது அருகிலிருந்த வசீமின் மனைவி அப்ரின் இதனைக் கண்டு சப்தம் போட்டாா். அப்ரினின் சப்தம் கேட்டு ஓட்டுநா் பேருந்தை நிறுத்தவே, 3 பெண்களும் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோட முயன்றனா்.

ADVERTISEMENT

ஆனால், சக பயணிகள் ஓடிச் சென்று இரு பெண்களை மடக்கிப் பிடித்தனா். மேலும் ஒரு பெண் தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து கைக் குழந்தையுடன் பிடிபட்ட இரு பெண்களையும் வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் பிடிபட்ட பெண்கள் திருச்சி பீமா நகரைச் சோ்ந்த சகோதரிகள் ஆரிக்கா(30), அகிலா (28) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT