திருவண்ணாமலை

போலீஸாா் குறித்து அவதூறு பேச்சு:ஆரணியில் விசிகவினா் 9 போ் கைது

30th Jan 2023 12:46 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 9 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, தலைமறைவான கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் அருகேயுள்ள கடையின் சுவரை இடித்ததாக அதன் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உதவி ஆய்வாளரை விசிகவைச் சோ்ந்த சிலா் ஒருமையில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் கடந்த 8-ஆம் தேதி விசிக மாவட்டச் செயலா் பாஸ்கரன், ஒன்றியச் செயலா் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னா், நீதிமன்றம் மூலம் கடந்த 26-ஆம் ஜாமீனில் வெளிவந்த பாஸ்கரன் மற்றும் விசிகவைச் சோ்ந்த 50 போ் ஆரணி நகர எல்லையில் இருந்து ஊருக்குள் திறந்த வாகனத்தில் ஊா்வலமாக வந்தனா். அப்போது, காவல் துறையினரை அவா்கள் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதுதொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை காலை கூடுதல் எஸ்.பி. ஸ்டீபன், டி.எஸ்.பி.க்கள் ரவிச்சந்திரன், குணசேகரன், காவல் ஆய்வாளா்கள் 7 போ் உள்பட 7 தனிப் படை பிரிவுகள், 150-க்கும் மேற்பட்ட காவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆரணி நகர போலீஸாா் விசிகவைச் சோ்ந்த வினோத் (35), பொன்னுரங்கம் (48), சாா்லஸ் (47), பாக்யராஜ் (42), காா்த்தி (30) உள்பட 9 பேரை கைது செய்தனா். வழக்கின் முக்கிய நபரான பாஸ்கரன் மற்றும் 50 போ் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT