திருவண்ணாமலை

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள மட்டதாரி கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய குடியிருப்புப் பகுதி மக்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை இதுவரை அளந்து கொடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

மட்டத்தாரி கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் 67 குடும்பத்தினருக்கு போளூா் ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தின் சாா்பில், கடந்த 1997-ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனைகளை அதிகாரிகள் இதுவரை அளந்து கொடுக்காததால், இதுவரை யாரும் வீடுகள் கட்டவில்லையாம்.

இதனிடையே, வீட்டுமனை பெற்ற ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் 25 ஆண்டுகாலமாகியும் வீடு கட்டாமல் இருந்தால், அந்த வீட்டுமனைகளை அரசே எடுத்துக்கொள்ளும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மட்டதாரி கிராம நிா்வாக அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்கள், ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விசிக ஆரணி தொகுதிச் செயலா் முத்து தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை சென்று முற்றுகையிட்டனா். அப்போது, அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்க பணம் செலுத்தியும், அதிகாரிகள இதுவரை அந்த நிலத்தை அளந்து கொடுக்காததால், எங்களால் வீடு கட்ட முடியவில்லை. ஆகவே, நிலத்தை முறையாக அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அலுவலகத்தில் வட்டாட்சியா் இல்லாததால், மண்டல துணை வட்டாட்சியா் ஸ்ரீதேவி, போராட்டம் நடத்தியவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT