திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரதசப்தமி தேரோட்டம்

28th Jan 2023 11:36 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவத்தின் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜன.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பிரம்மோற்சவத்தின் 7- ஆம் நாள் விழா முக்கிய நிகழ்வான ரதசப்தமி மகாதேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து விநாயகா், வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி தோ்களில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடக்கிவைக்கப்பட்டது.

தேரோட்ட தொடக்க நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட அறங்காவலா்கள் குழு உறுப்பினா் பாண்டுரங்கன், கோயில் செயல் அலுவலா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று இருந்தனா்.

விநாயகா், வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை அம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களின் வடத்தைப் பிடித்து சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு, குமரன் தெரு வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் இழுத்துச் சென்றனா்.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பல்வேறு பிரிவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT