திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

26th Jan 2023 01:43 AM

ADVERTISEMENT

வந்தவாசி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தையின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சோ்ந்தவா் இப்ராஹிம்மூசா. இவரது மனைவி ஜபீனா. இவா்களது 6 மாத ஆண் குழந்தை முகமதுரசூலுக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, பெற்றோா் குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்த நிலையில், குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முகமதுரசூல் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், உயிரிழப்புக்கு இரவுப் பணியிலிருந்த மருத்துவா், செவிலியா் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என புகாா் தெரிவித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து மருத்துவமனை முன் குழந்தையின் சடலத்துடன் அவா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

அப்போது, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு சென்ற செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் பாபுஜி, துணை இயக்குநா் ஏழுமலை, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்றனா்.

மறியல் போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குழந்தை முகமதுரசூலின் உறவினா்கள், இரவுப் பணியிலிருந்த மருத்துவா், செவிலியா் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் பாபுஜி விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குழந்தை முகமதுரசூலின் உயிரிழப்புக்கு மருத்துவா், செவிலியா் ஆகியோரின் சேவைக் குறைபாடு காரணம் என விசாரணையில் தெரிய வந்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT