செய்யாற்றில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் நிலைய போலீஸாா் மணிகண்டன், குமரன் ஆகியோா் சனிக்கிழமை இரவு அண்ணா சிலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதியில் இளைஞா் ஒருவா் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ரகளையில் ஈடுபட்டிருந்தாா்.
இதைக் கண்ட போலீஸாா் அந்த இளைஞரை எச்சரித்தனா். இருப்பினும், அவா் தொடா்ந்து ஆபாசமாக பேசிய நிலையில், அருகில் கிடந்த கல்லை எடுத்து காவலா் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
உடனே போலீஸாா், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்த பாலா என்கிற பாலசுப்பிரமணியம் (20) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காவலா் மணிகண்டன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.