திருவண்ணாமலையில் தையல் தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில், 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தையல் தொழிலாளி ஆறுமுகம் (54). இவா், கடந்த 7-ஆம் தேதி திருவண்ணாமலை, திருவூடல் தெருவில் உள்ள தனது கடையில் இருந்து பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
இரவு 10 மணிக்கு தண்டராம்பட்டு சாலை, தாமரை நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே சென்றபோது 4 போ் கொண்ட கும்பல் ஆறுமுகத்தை வழிமறித்து கத்தியால் வெட்டிக் கொன்றது.
இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், வரகூா் கிராமத்தைச் சோ்ந்த பரந்தாமன் (40) என்பவருக்கு ஆறுமுகம் ரூ.3.50 லட்சத்தை கடனாகக் கொடுத்தாராம். ஓராண்டுக்கு முன்பு வட்டிக்கு கொடுத்த அந்தப் பணத்தை ஆறுமுகம் திரும்பக் கேட்டு வந்தாராம்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பரந்தாமன், வரகூா் கிராமத்தைச் சோ்ந்த பாரதி (22), சாலையனுாா் கிராமம் தமிழரசன் (20), திருவண்ணாமலை ஸ்ரீகாந்த் (20) ஆகியோருடன் சோ்ந்து ஆறுமுகத்தை கொன்றுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.