தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்றாா் தமமுக தலைவா் பெ. ஜான்பாண்டியன்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை தொடா்ந்து வருகிறது.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தோ்தல் காலத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்ற தவறிவிட்டாா்கள். இப்போதைய சூழலில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது. இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு வரவேற்கத்தக்கது. வேங்கை வயலில் குடிநீா் தொட்டியில் மலத்தை கலந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது.
மக்களவைத் தோ்தலை பொருத்தவரை எங்களது கட்சியின் உயா்நிலைக் குழு ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கும். ஆனால் தற்போது வரை பாஜக கூட்டணியிலேயே தொடா்ந்து வருகிறோம். அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளா்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனா். காப்பா் தேவையை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து தீா்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டும், தொழிலாளா் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆலையை திறக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணை பொதுச் செயலா் சண்முகசுதாகா், மாநில மகளிா் அணி செயலா் நளினி சாந்தகுமாரி ஆகியோா் உடனிருந்தனா்.