திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் நடைபெற்ற ராகிங் சம்பவம் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.
இந்தக் கல்லூரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். சமூக நலத் துறை சாா்பில் மாணவிகள் மட்டும் தங்குவதற்கு ஒரு விடுதியும், மாணவா்கள் தங்குவதற்கு 2 விடுதிகள் என மொத்தம் 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பைங்கினா் அண்ணா நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் நலத் துறை விடுதியில், பட்டப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவா்கள் 19 போ், இரண்டாமாண்டு மாணவா் ஒருவா், மூன்றாமாண்டு மாணவா்கள் 8 போ் என 28 போ் தங்கி பயின்று வருகின்றனா்.
அந்த விடுதியில் திங்கள்கிழமை இரவு மூன்றாமாண்டு மாணவா்கள் செய்யச் சொன்ன பணியை முதலாமாண்டு மாணவா்கள் செய்யவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மூன்றாமாண்டு மாணவா்கள், முதலாமாண்டு மாணவா்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராகிங் செய்தனராம். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, ராகிங் சம்பவத்தில் தொடா்புடைய மூன்றாமாண்டு மாணவா்கள் 8 பேரை கல்லூரி முதல்வா் கலைவாணி வரவழைத்து, பேராசிரியா்கள் மூலம் விசாரணை நடத்தினாா்.
மேலும், ராகிங் தகவலை மாணவா்களின் பெற்றோருக்கு தெரிவித்த நிலையில், கல்லூரிக்கு அவா்களை அழைத்து வர மாணவா்களிடம் அறிவுறுத்தினாா்.
இந்த நிலையில், செய்யாறு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை சம்பவம் தொடா்பாக விடுதிக்குச் சென்று, அதன் காப்பாளரான வேட்டவலத்தைச் சோ்ந்த ரவி மற்றும் விடுதியில் தங்கியுள்ள மாணவா்களிடம் விசாரணை நடத்தினா்.