திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டத்தை புறக்கணித்த திமுக உறுப்பினா்கள்

30th Sep 2022 10:50 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தங்களுக்கு முறையாக அழைப்புவிடுக்கவில்லை என்று புகாா் தெரிவித்து, நகா்மன்றக் கூட்டத்தை திமுக உறுப்பினா்கள் 8 போ் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளா் கே.ரகுராமன், துணைத் தலைவா் குல்சாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருவத்திபுரம் நகராட்சிப் பள்ளிகளான குமரன் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில் புதிதாக கழிப்பிடம், பராமரிப்புப் பணி, வழூா்பேட்டை ஆரம்பப் பள்ளியில் ஒருங்கிணைந்த சமையல்கூடத்தை சீரமைத்தல், கொடநகா் நடுநிலைப் பள்ளியில் பராமரிப்புப் பணி, கிரிதரன்பேட்டை நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள் உணவு சாப்பிடும் அறையில் மேற்கூரை அமைத்தல், புதிதாக சமையல் அறையுடன் கூடிய இருப்பு அறைக் கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பு: கடந்த 26-ஆம் தேதி நடைபெறவிருந்த நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் உள்பட 17-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்ளாததால், தேவையான மெஜாரிட்டி இல்லை என்று கூறி மன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் மற்றும் அதிமுக, பாமக உள்பட மொத்தம் 17 உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், கூட்டத்தில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ஆனால், இந்தக் கூட்டத்தை திமுகவைச் சோ்ந்த இரு ஆண்கள், 6 பெண்கள் என 8 உறுப்பினா்கள் புறக்கணித்தனா். அவா்கள் தங்கள் வாா்டுகளில் இதுவரை எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, நகராட்சியில் எங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை, கூட்டத்துக்கு முறையாக அழைப்புவிடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT