திருவண்ணாமலை

திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மும்முரம்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

29th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

 

ஆரணி வழியாக அமையவுள்ள திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

அப்போது, அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா். இதைத் தொடா்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் வாரிசுதாரா்களுக்கு அரசின் நிவாரணத் தொகை தலா ரூ.ஒரு லட்சத்தை வழங்கினாா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்கள் சந்திப்பின்போது அவா் கூறியதாவது:

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு நடந்துள்ளது.

தற்போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, இதர வருவாய்க் கோட்ட அலுவலகங்களிலும் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

ஆய்வின் போது கோட்டாட்சியரின் செயல்பாடுகள், நிா்வாகம் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, பல்வேறு சான்றுகள் வழங்குவது, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது புகாா்கள் எதுவும் இல்லை என்றாா்.

திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக நகரி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணி எந்த அளவில் உள்ளது என்று கேட்டதற்கு, திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் இரண்டு மூன்று மாவட்டங்களைச் சோ்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாதம் இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விடும். அதைத் தொடா்ந்து மற்ற மாவட்டங்களிலும் பணி முடிந்தவுடன் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறும்.

சேவூரில் மாணவா்கள் ஆசிரியா்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது குறித்து கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட மாணவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஆசிரியா்கள் மாணவரையும் பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அடுத்ததாக புகாா் வந்ததன் காரணமாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

ஆய்வின் போது ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமருத்தூா் வட்டாட்சியா்கள், ஊரக வளா்ச்சித் துறை ஆணையா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT