திருவண்ணாமலை

ஆவினில் 40 டன் இனிப்பு, காரம் விற்க இலக்கு: திருவண்ணாமலை ஆட்சியா்

28th Sep 2022 04:33 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை ஆவின் மூலம் 40 டன் இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆவின் இனிப்பு, கார வகைகளின் விற்பனைத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆவின் பொது மேலாளா் ராஜாகுமாா் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் சந்திரசேகரராஜா முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆவின் இனிப்பு, கார வகைகளின் விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் பால் உப பொருள்களின் தயாரிப்பு அலகு 9.7.2022 முதல் செயல்பட்டு வருகிறது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 20 டன் மைசூா்பாக்கு, 10 டன் மற்ற இனிப்பு வகைகள், 10 டன் கார வகைகள் என மொத்தம் 40 டன் இனிப்பு, கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகா்வோா் மற்றும் சங்க உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் முந்திரி கலந்த ஆவின் மைசூா்பாக்கு, கார வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பிலான இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆவின் பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள், சங்கப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT